நிலப்பரப்பும் பெருங்கடல்களும் (6th சமூக அறிவியல்)

 அலகு 6-நிலப்பரப்பும் பெருங்கடல்களும் 

கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள் 

• பெரும் நிலப்பரப்பினைக் கண்டங்கள் எனவும் பெருங்கண்டம் பாஞ்சியா எனவும் அழைக்கப்படுகிறது. 

• பெருங்கண்டத்தைச் சுற்றியுள்ள நீர்பரப்பு பான்தலாசா ஆகும். 

•  200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்நிலப்பரப்பு மெதுவாக நகரத் தொடங்கியது. நாளடைவில் கண்டங்களும், பெருங்கடல்களும் தற்போதுள்ள நிலையை அடைந்தன. 

• புவியின் மேற்பரப்பு 71 சதவிகிதம் நீரால் சூழப்பட்டுள்ளது. எஞ்சிய 29 சதவிகிதம் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. 

• புவியின் மேற்பரப்பு சீராக காணப்படுவதில்லை. 

• புவியில் உயர்ந்த மலைகள், ஆழ்கடல்கள் மற்றும் பல்வேறு வகையான நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன. 


நிலத்தோற்றங்களின் வகைகள் 

1. முதல்நிலை நிலைத்தோற்றங்கள் 

2. இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் 

3. மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள். 


முதல்நிலை நிலைத்தோற்றங்கள் 

• கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள் முதல்நிலை நிலத்தோற்றங்கள் ஆகும். 

• மிகப் பெரும் நிலப்பரப்பினைக் கண்டங்கள் எனவும் பரந்த நீர் பரப்பினை பெருங்கடல்கள் எனவும் அழைக்கிறோம். 

• உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன. அவை ஆசியா ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா. ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா. 

• உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா ஆகும். ஆஸ்திரேலியா மிகச் சிறிய கண்டமாகும். 

• புவியில் ஐந்து பெருங்கடல்கள் காணப்படுகின்றன. அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல் ஆகும். 

• இவற்றுள் பசிபிக் பெருங்கடல் மிகப்பெரியது. ஆர்க்டிக் பெருங்கடல் மிகச்சிறியதாகும். 

• நிலச்சந்தி -  இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக் கூடியதும் அல்லது இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்கக் கூடியதுமான மிக குறுகிய நிலப்பகுதி நிலச்சந்தி ஆகும்.


இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் 

• மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் என அழைக்கப்படுகின்றன. 


மலைகள் 

• சுற்றுப்புற நிலப்பகுதியை விட 600 மீட்டருக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகள் ஆகும். இவை வன்சரிவைக் கொண்டிருக்கும். 

• மலைகள் தனித்தோ அல்லது தொடர்களாகவோ காணப்படுகின்றன. 

• தொடர்ச்சியாக நீண்டு காணப்படும் மலைகள் மலைத்தொடர் எனப்படும். 

• பொதுவாக மலைத் தொடர்கள் பல நூறு கிலோ மீட்டர் முதல் பல்லாயிரம் கிலோ மீட்டர் வரை பரவிக் காணப்படுகின்றன. 

• உதாரணமாக, ஆசியாவில் உள்ளஇமயமலைத்தொடர். வட அமெரிக்காவில் உள்ள ராக்கி மலைத்தொடர் மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடர் ஆகியவற்றைக் கூறலாம்.

• உலகின் நீளமான மலைத்தொடர் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத் தொடராகும். 

• ஆண்டிஸ் மலைத் தொடர் சுமார் 7000 கிலோ மீட்டர் நீளத்திற்கு வடக்குத் தெற்காகப் பரவியுள்ளது. 

• ஒரு மலைத்தொடரின் உயரமான பகுதி சிகரம் எனப்படுகிறது. உலகிலேயே உயரமான சிகரம் இமயமலைத் தொடரில் உள்ள எவரெஸ்ட் (8848மீட்டர்) ஆகும். 

• மலைகள், ஆறுகள் உற்பத்தியாகும் இடமாகத் திகழ்கின்றன. இவை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகவும் உள்ளன. 

• டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம். 

• சில மலைப்பகுதிகள் சிறந்த சுற்றுலாத் தலங்களாகவும், கோடை வாழிடங்களாகவும் விளங்குகின்றன. 

• உதகமண்டலம், கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு மற்றும் ஏலகிரி போன்ற கோடை வாழிடங்கள் தமிழ் நாட்டில் அமைந்துள்ளன. 


பீடபூமிகள் 

• சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும். 

• பீடபூமிகள் மலைகளைப் போன்று வன்சரிவுகள் கொண்டவை. 

• பீடபூமிகள் நூறு மீட்டலிருந்து பல்லாயிரம் மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகின்றன. 

• உலகிலேயே உயர்ந்த பீடபூமி திபெத் பீடபூமியாகும். ஆகவே திபெத் பீடபூமியை "உலகத்தின் கூரை" என்று அழைக்கிறோம். 

• பீடபூமி சமமான மேற்பரப்பைக் கொண்டுள்ளதால் "மேசைநிலம்" எனவும் அழைக்கப்படுகிறது. 

• பொதுவாக பீடபூமிகளில் கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

• இந்தியாவில் காணப்படும் சோட்டா நாகபுரி பீடபூமிகனிமங்கள் நிறைந்த பகுதியாகும். எனவே சுரங்கத்தொழில் இப்பகுதியின் முக்கியத் தொழிலாகும். 

• தென்னிந்தியாவில் உள்ள தக்காணப் பீடபூமி எரிமலைப் பாறைகளால் ஆனது. 

• தருமபுரி பீடபூமி, கோயமுத்தூர் பீடபூமி மற்றும் மதுரை பீடபூமி ஆகியன தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகளாகும்.


சமவெளிகள்

• சமவெளி சமமான மற்றும் தாழ் நிலத் தோற்றமாகும். சில சமவெளிகள் சீரற்றதாகவும் காணப்படும். 

• சமவெளிகள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம் ஆகும். 

• பெரும்பாலும் சமவெளிகள், ஆறுகள், அதன் துணை ஆறுகள் மற்றும் கிளை ஆறுகளால் உருவாக்கப்படுகின்றன.இங்கு வளமான மண்ணும் நீர்ப்பாசனமும் இருப்பதால் வேளாண்மை தழைத்தோங்குகிறது. 

• மக்கள் வாழ்வதற்கு சமவெளிகள் ஏற்றதாய் உள்ளன. எனவே அவை உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களாக விளங்குகின்றன. 

• மிகப் பழைய நாகரிகங்களான மெசபடோமியோ நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் போன்றவை சமவெளிகளில் தோன்றியதாகும். வட இந்தியாவிலுள்ள கங்கைச் சமவெளி உலகின் பெரிய சமவெளிகளில் ஒன்றாகும். 

• தமிழ் நாட்டிலுள்ள முக்கிய சமவெளிகள் காவேரி மற்றும் வைகை ஆறுகளால் உருவாக்கப்பட்டவை ஆகும். 

• பெருங்கடல்கள் மற்றும் கடல்களை ஒட்டியுள்ள தாழ்நிலங்கள் கடற்கரைச் சமவெளிகள் ஆகும். 

• ஆற்றுச் சமவெளிகள் பண்டைய நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கின. 

• இந்தியாவில் சிந்து நதி மற்றும் எகிப்தின் நைல் நதி போன்ற ஆற்றுச் சமவெளிகளில் நாகரிகங்கள் தோன்றி செழித்தோங்கி வளர்ந்தன. 


மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் 

• ஆறுகள், பனியாறுகள், காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கியச் செயல்கள் அரித்தல் மற்றும் படியவைத்தல் ஆகும். 

• படிய வைத்தல் செயல்களால் மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும். 

• புவியின் மேற்பரப்பிலுள்ள பொருள்களை (பாறைகள்) அரித்து அகற்றுதலே அரித்தல் எனப்படுகிறது. 

• அரிக்கப்பட்ட பாறை துகள்கள் கடத்தப்பட்டு தாழ்நிலப் பகுதிகளில் படியவைக்கப் படுகின்றன. இச்செயல் படியவைத்தல் எனப்படுகிறது. 


பெருங்கடல்கள் 

• விண்வெளியில் இருந்து பார்க்கும் போது புவி நீல நிறமாக காட்சியளிக்கும். 

• புவியின் மூன்றில் இரண்டு பங்கு நீர்ப்பரப்பாக உள்ளது. 

• பெரும் நீர்ப்பரப்பு, பெருங்கடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

• முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிலத்தால் சூழப்பட்ட பெரிய நீர்ப்பரப்பு கடல் எனப்படுகிறது.


பெருங்கடல்களின் பரப்பளவு (%) 

1. பசிபிக் பெருங்கடல் - 47% 

2. அட்லாண்டிக் பெருங்கடல் -23% 

3. இந்தியப் பெருங்கடல் -20%

4. தென்பெருங்கடல் - 6% 

5. ஆர்க்டிக் பெருங்கடல் - 4%.  


பசிபிக் பெருங்கடல் 

• புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும். 

• பசிபிக் பெருங்கடல் புவியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. 

• பசிபிக் பெருங்கடலின் பரப்பளவு சுமார் 168.72 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும். 

• பசிபிக் பெருங்கடலின் மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவும், கிழக்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன. 

• பசிபிக் பெருங்கடல் முக்கோண வடிவத்தில் காணப்படுகிறது. பசிபிக் பெருங்கடல் வடக்குத் தெற்காக ஆர்க்டிக் பெருங்கடல் முதல் தென் பெருங்கடல் வரை பரவியுள்ளது. 

• முக்கோண வடிவத்தின் மேற்பகுதி பசிபிக் பெருங்கடலையும் ஆர்டிக் பெருங்கடலையும் இணைக்கும் பெரிங் நீர்ச்சந்தியில் காணப்படுகிறது. 

• உலகின உயரமான எவரெஸ்ட் சிகரம் (8848 மீ) மரியானா அகழியில் (10,994 மீ) மூழ்கிவிடும். 

• கடலின் ஆழத்தை 'மீ' என்ற குறியீட்டால் குறிப்பிட வேண்டும். 

• பேரிங் கடல், சீனக் கடல், ஜப்பான் கடல், தாஸ்மானியா கடல், பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவை பசிபிக் பெருங்கடலில் உள்ள எல்லையோரக் கடல்களாகும். 

• இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹவாய், நியூசிலாந்து உள்ளிட்ட பல தீவுகள் பசிபிக் பெருங்கடலில் உள்ளன. புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி (10994 மீ) பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. 

• பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் "நெருப்பு வளையம்" என அழைக்கப்படுகிறது. 

• ஸ்பெயின் நாட்டின் மாலுமி பெர்டினாண்டு மெகல்லன் பசிபிக் என பெயரிட்டார். பசிபிக் என்பதன் பொருள் அமைதி.


அட்லாண்டிக் பெருங்கடல் 

• புவியின் இரண்டாவது பெரிய பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகும்.  

• அட்லாண்டிக் பெருங்கடலின் பரப்பளவு சுமார் 8513 மில்லியன் சதுர கி.மீட்டர் ஆகும். 

• அட்லாண்டிக் பெருங்கடல் புவியின் மொத்த பரப்பளவில் ஆறில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. 

• அட்லாண்டிக் பெருங்கடலின் கிழக்கே ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும் மேற்கே வட அமெரிக்காவும், தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன. 

• பசிபிக் பெருங்கடலைப் போன்றே இப்பெருங்கடலும் வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் முதல் தெற்கே தென் பெருங்கடல் வரை பரவியுள்ளது. 

• அட்லாண்டிக் பெருங்கடல் ஆங்கில எழுத்து 'S' வடிவத்தைப் போன்று உள்ளது. 

• ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி அட்லாண்டிக் பெருங்கடலையும், மத்திய தரைக் கடலையும் இணைக்கிறது. 

• கிழக்கு மற்றும் மேற்கு அரைகோளங்களுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து அட்லாண்டிக் பெருங்கடலில் அதிகமாக நடைபெறுகிறது. 

• போர்ட்டோ ரிக்கோ அகழியில் காணப்படும் மில்வாக்கி அகழி அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதியாகும். இது 8,600 மீ ஆழமுடையது ஆகும். 

• கரீபியன் கடல், மெக்சிகோ வளைகுடா, வடகடல், கினியா வளைகுடா, மத்திய தரைக் கடல் போன்றவை அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லையோரக் கடல்களாகும். 

• செயின்ட் ஹெலனா, நியூபவுண்ட்லாந்து, ஐஸ்லாந்து, ஃபாக்லாந்து உள்ளிட்ட பல தீவுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளன.


இந்தியப் பெருங்கடல் 

• இந்தியப் பெருங்கடல் புவியின் மூன்றாவது பெரிய பெருங்கடல் ஆகும். 

• இந்தியப் பெருங்கடலின் பரப்பு சுமார் 70.56 மில்லியன் சதுர கி.மீ. ஆகும். 

• இந்தியாவிற்கு அருகாமையில் உள்ளதால் இப்பெருங்டல் இப்பெயரைப் பெற்றது.  

• இந்தியப் பெருங்கடல் முக்கோண வடிவத்தைக் கொண்டுள்ளது. 

• இந்தியப் பெருங்கடலின் மேற்கே ஆப்பிரிக்கா வடக்கே ஆசியா, கிழக்கே ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களால் சூழப்பட்டுள்ளது. 

• இந்தியப் பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவுகள். மாலத் தீவுகள், இலங்கை, மொரிஷியஸ், ரீயூனியன் உள்ளிட்ட பல தீவுகள் காணப்படுகின்றன. 

• மலாக்கா நீர்ச்சந்தி இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது. 

• இந்தியப் பெருங்கடலில் வங்காள விரிகுடா, அரபிக் கடல், பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் போன்ற கடல்கள் எல்லையோரக் கடல்களாக உள்ளன. 

• இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதி ஜாவா அகழியாகும் . ஜாவா அகழியின் ஆழம் 7.725 மீட்டர் ஆகும். 

• பாக் நீர்ச்சந்தி வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைக்கிறது. 

• 6' கால்வாய் - இந்திரா முனையையும் இந்தோனேசியாவையும் பிரிக்கிறது. 

• 8' கால்வாய் மாலத்தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது 

• 9' கால்வாய் லட்சதீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது. 

• 10' கால்வாய் அந்தமான் தீவையும் நிக்கோபார் தீவையும் பிரிக்கிறது.


தென்பெருங்கடல் 

• தென்பெருங்கடல் அண்டார்க்டிகாவை சுற்றி அமைந்துள்ளது. 

• தென் பெருங்கடல் 60 தெற்கு அட்சத்தால் சூழப்பட்டுள்ளது. 

• தென்பெருங்கடலின் பரப்பளவு 21.96 மில்லியன்சதுர கி.மீ ஆகும். 

• தென்பெருங்கடல் இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் தென் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. 

• ராஸ் கடல், வெடல் கடல் மற்றம் டேவிஸ் கடல் தென் பெருங்கடல் மற்றும் அதன் எல்லையோரக் கடல்களாகும். 

• ஃபேர்வெல் தீவு, பெளமன் தீவு, ஹார்ட்ஸ் தீவு போன்ற தீவுகள் இப்பெருங்கடலில் காணப்படுகின்றன. 

• அருகிலுள்ள பெருங்கடல்களைக் காட்டிலும் தென்பெருங்கடல் குளிர்ச்சியாக உள்ளது. 

• தென்பெருங்கடலின் பெரும்பான்மையான பகுதி பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ளது. 

• தென்பெருங்கடலின் ஆழமான பகுதி தென் சான்ட்விச் அகழி 7,235 மீட்டர் ஆகும்.

 

ஆர்க்டிக் பெருங்கடல் 

• ஆர்க்டிக் பெருங்கடல் மிகச் சிறியது ஆகும். 

• இது ஆர்க்டிக் வட்டத்தினுள் அமைந்துள்ளது. 

• இதன் பரப்பளவு சுமார் 15.56 மில்லியன் சதுர கிமீ. 

• வருடத்தின் பெரும்பான்மையான நாட்களில் ஆர்க்டிக் பெருங்கடல் உறைந்தே காணப்படும். 

• நார்வே கடல், கிரீன்லாந்து கடல், கிழக்கு சைபீரியக் கடல் மற்றும் பேரண்ட் கடல் ஆகியன இதன் எல்லையோரக் கடல்களாகும். 

• கிரீன்லாந்து தீவு, நியூ சைபீரியத் தீவு மற்றும் நவோயா செமல்யா போன்ற தீவுகள் இப்பெருங்கடலில் காணப்படுகின்றன.

• வடதுருவம் ஆர்க்டிக் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது. 

• இப்பெருங்டலின் ஆழமான  பகுதி 'யுரேசியன் தாழ்நிலம்' ஆகும். இதன் ஆழம் சுமார் 5,449 மீட்டர் ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.