1. அறிமுகம்
•
அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (U.S.A.)
தோன்றியது.
2. இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்
•
1946ஆம்
ஆண்டு, அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் நிர்ணய
சபையால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
•
இச்சபையில் 292 மாகாணப் பிரதிநிதிகள், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள்,
பலுச்சிஸ்தானின் சார்பில் ஒருவர் (1) மற்றும் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில்
மூவர் (3) என மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர்.
•
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம், 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் நடைபெற்றது.
•
இச்சபையின் தற்காலிக தலைவராக மூத்த உறுப்பினர் டாக்டர். சச்சிதானந்த சின்கா
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
•
இந்திய அரசியலமைப்பை உருவாக்க கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் போதே அவர் இறந்ததைத்
தொடர்ந்து, டாக்டர். இராஜேந்திர பிரசாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின்
தலைவராகவும், H.C. முகர்ஜி மற்றும் V.T. கிருஷ்ணமாச்சாரி இருவரும் துணைத் தலைவர்களாகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
•
இக்கூட்டத் தொடர் 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது.
• இக்கூட்டத்தின் போது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
அவற்றுள் சில ஏற்கப்பட்டன.
•
அரசியல் நிர்ணய சபை பல்வேறு குழுக்களின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும்
பணியை மேற்கொண்டது.
•
இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர். B.R. அம்பேத்கர் தலைமையின்
கீழ் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. எனவே அவர் "இந்திய அரசியலமைப்பின்
தந்தை" என அறியப்படுகிறார்.
•
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பின்னர், பொதுமக்கள், பத்திரிக்கைகள், மாகாண
சட்டமன்றங்கள் மற்றும் பலரால் விவாதிக்கப்பட்டது.
•
இறுதியாக முகவுரை, 22 பாகங்கள், 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகளைக் கொண்ட
இந்திய அரசியலமைப்பு, 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
•
1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
•
இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள்
•
உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
•
இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை
•
இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
•
கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
•
இந்தியாவைச் சமயச் சார்பற்ற நாடாக்குகிறது.
•
சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
•
உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய
குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.
4. முகவுரை
•
'முகவுரை' (Preamble) என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக்
குறிக்கிறது. இது அரசியலமைப்பின் அடிப்படைக்
கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை உள்ளடக்கியது.
•
இது பெரும் மதிப்புடன் "அரசியலமைப்பின் திறவுகோல்" என குறிப்பிடப்படுகிறது.
•
1947ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
ஜவகர்லால் நேருவின் ‘குறிக்கோள் தீர்மானத்தின்’ அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின்
முகவுரை அமைந்துள்ளது.
•
முகவுரையானது 1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி திருத்தப்பட்டது.
அதன்படி, சமதர்மம், சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு போன்ற மூன்று புதிய சொற்கள்
சேர்க்கப்பட்டன.
•
‘இந்திய மக்களாகிய நாம்’ என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது.
•
இதிலிருந்து, இந்திய மக்களே இந்திய அரசியலமைப்பின் ஆதாரம் என நாம் அறியலாம்.
•
இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என நமது
அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.
•
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி என அனைத்திலும்
பாதுகாப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
• 1789ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாயின. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
5. குடியுரிமை
•
'சிட்டிசன்' (Citizen) எனும் சொல் 'சிவிஸ்' (Civis) எனும் இலத்தீன் சொல்லில் இருந்து
பெறப்பட்டதாகும். இதன் பொருள் ஒரு ‘நகர அரசில் வசிப்பவர்’ என்பதாகும்.
•
இந்திய அரசியலமைப்பு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
•
இந்திய அரசியலமைப்பின் பகுதி II சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையைப்
பற்றி விளக்குகின்றன.
குடியுரிமைச் சட்டம் (1955)
•
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு, 1955ல் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டம்,
குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகிறது.
•
இச்சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் எட்டு முறை திருத்தப்பட்டுள்ளது.
குடியுரிமை பெறுதல்
•
குடியுரிமைச் சட்டம் 1955ன் படி ஒருவர் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு முறையில்
குடியுரிமை பெறமுடியும்.
i.
பிறப்பின் மூலம்: 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ
இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர்.
ii.
வம்சாவளி மூலம்: 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ
வெளிநாட்டில் பிறந்த ஒருவரின் தந்தை (அவர் பிறந்த போது) இந்தியக் குடிமகனாக இருக்கும்
பட்சத்தில் வெளிநாட்டில் பிறந்த அவர், வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும்.
iii.
பதிவின் மூலம்: ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி, பொருத்தமான அங்கீகாரத்துடன்
பதிவு செய்வதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
iv.
இயல்புரிமை மூலம்: ஒரு வெளிநாட்டவர், இந்திய அரசிற்கு, இயல்புரிமை
கோரி விண்ணப்பிப்பதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
v.
பிரதேச (நாடுகள்) இணைவின் மூலம்: பிற நாடுகள் / பகுதிகள் இந்தியாவுடன்
இணையும் போது இந்திய அரசு அவ்வாறு இணையும் நாடுகளின் மக்களைத் தமது குடிமக்களாகக் கருதி
அவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம்.
குடியுரிமையை இழத்தல்
•
குடியுரிமைச் சட்டம் 1955ன் படி, ஒருவர் தன் குடியுரிமையை, சட்டத்தின்
மூலமாக பெறப்பட்டதாகவோ (அ) அரசியலமைப்பின் கீழ் முன்னுரிமையால் பெறப்பட்டதாகவோ இருக்கும்பட்சத்தில்
பெற்ற குடியுரிமையைத் துறத்தல், முடிவுறச் செய்தல், இழத்தல் என்ற பின்வரும் மூன்று
வழிகளில் இழப்பார்.
i.
ஒரு குடிமகன் தாமாக முன்வந்து தனது குடியுரிமையை துறத்தல்.
ii.
வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெறும்போது தாமாகவே இந்தியக் குடியுரிமை முடிவுக்கு வந்துவிடுதல்.
iii.
இயல்புரிமையின் மூலம் குடியுரிமை பெற்ற ஒரு குடிமகன், மோசடி செய்து குடியுரிமை பெற்றவர்,
தவறான பிரதிநிதித்துவம் தந்தவர் (அ) உண்மைகளை மறைத்தவர் (அ) எதிரி நாட்டுடன் வாணிகம்
செய்தவர் அல்லது இரண்டாண்டு காலத்திற்கு சிறை தண்டனை பெற்றவர் என்பதை மத்திய அரசு கண்டறிந்து
அவர் குற்றம் புரிந்தவர் என்று திருப்திப்படும் பட்சத்தில் மத்திய அரசு, அவரது குடியுரிமையை
இழக்கச் செய்யும்.
6. அடிப்படை உரிமை
•
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (III) 12ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள்
அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன.
•
அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த அடிப்படை உரிமைகளை அமெரிக்க ஐக்கிய நாடுகளின்
அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கினார்கள்.
•
முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை வழங்கியது. ஆனால், தற்போது
ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
•
இந்திய அரசியலமைப்பின் பகுதி (III) ‘இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது.
•
இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது. ஆனால் இந்திய
குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகளும் உள்ளன.
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை (சட்டப்பிரிவு - 32)
•
நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை
எனப்படும்.
•
இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.
•
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் இரண்டுமே ஐந்து வகையான நீதிப்பேராணைகளை
வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன.
•
இது போன்ற ஆணைகளை வெளியிட்டு மக்களின் உரிமைகளைக் காப்பதினால் உச்சநீதிமன்றம் ‘அரசியலமைப்பின்
பாதுகாவலன்’ என அழைக்கப்படுகிறது.
•
டாக்டர். B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32, இந்திய அரசியலமைப்பின்
‘இதயம் மற்றும் ஆன்மா’ ஆகும்.
அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas corpus)
•
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.
ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus)
•
மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து
நிறைவேற்றிக் கொள்ள முடியும்
இ) தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition)
•
ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.
ஈ) ஆவணக் கேட்பு பேராணை (Certiorari)
•
உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச்
செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.
உ) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை (Quo-Warranto)
•
இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை
தடை செய்கிறது.
அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல்
•
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத்தலைவரால் அவசரநிலை
அறிவிக்கப்படும் பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19ன் கீழ் உத்திரவாதம்
அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.
•
மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத்தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின்
மூலம் தடை செய்யலாம்.
•
குடியரசுத்தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
I. சமத்துவ உரிமை
•
பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
•
பிரிவு 15-
மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத்
தடை செய்தல்.
•
பிரிவு 16 - பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல். பிரிவு
17 - தீண்டாமையை ஒழித்தல்.
•
பிரிவு 18 - இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் - தவிர மற்ற
பட்டங்களை நீக்குதல்.
II. சுதந்திர உரிமை
•
பிரிவு 19 - பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான
முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள்
விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை.
•
பிரிவு 20 - குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து
பாதுகாப்பு பெறும் உரிமை.
•
பிரிவு 21 - வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு
பெறும் உரிமை.
•
பிரிவு 21 A - தொடக்கக்கல்வி பெறும் உரிமை.
•
பிரிவு 22 - சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான
பாதுகாப்பு உரிமை
III. சுரண்டலுக்கெதிரான உரிமை
•
பிரிவு 23 - கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற
வியாபாரத்தைத் தடுத்தல்.
•
பிரிவு 24 - தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத்
தொழிலாளர் முறையைத் தடுத்தல்.
IV. சமயச்சார்பு உரிமை
•
பிரிவு 25 - எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும்
உரிமை.
•
பிரிவு 26 - சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
•
பிரிவு 27 - எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான
சுதந்திரம்.
•
பிரிவு 28 -
மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில்
கலந்து கொள்ளாமலிருக்க உரிமை
V. கல்வி, கலாச்சார உரிமை
•
பிரிவு 29 - சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, மற்றும் கலாச்சாரப்
பாதுகாப்பு.
•
பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும்
உரிமை.
• 1978ஆம் ஆண்டு, 44ஆவது அரசியலமைப்புச்
சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது.
VI. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
•
பிரிவு 32 - தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்
போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.
7. அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்
•
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு
36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளது.
•
அரசியலமைப்புச் சட்டம், வழிகாட்டும் நெறிமுறைகளுக்காகத் தனியாக வகைப்பாட்டினையும் கொண்டிருக்கவில்லை.
•
இருப்பினும் பொருளடக்கம் மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் அவை மூன்று பெரும் பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது சமதர்ம, காந்திய மற்றும் தாராள் - அறிவுசார்ந்தவை
என்று பிரிக்கப்பட்டுள்ளன.
•
இந்த கொள்கைகளை, நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாகச் செயற்படுத்த முடியாது. ஆனால் இவை
ஒரு நாட்டினை நிர்வகிக்க அவசியமானவை. சமுதாய நலனை மக்களுக்குத் தருவதே இதன் நோக்கமாகும்.
•
இந்திய அரசியலமைப்பின் ‘புதுமையான சிறப்பம்சம்’ என டாக்டர். B.R. அம்பேத்கர் இதனை
விவரிக்கிறார்.
•
2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, 86வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி, இந்திய
அரசியலமைப்பின் பிரிவு 45 திருத்தப்பட்டு, பிரிவு 21A வின் கீழ் தொடக்கக்கல்வி, அடிப்படை
உரிமையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
•
இந்தத் திருத்தம், மாநில அரசுகள் முன்பருவ மழலையர் கல்வியை (Early Childhood Care
and Education - ECCE) 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்துகிறது.