அவசரகால ஏற்பாடுகள் (தேசிய, மாநில, நிதி சார்ந்த அவசரநிலை)

அவசரகால ஏற்பாடுகள்
தேசிய அவசரநிலை (சட்டப்பிரிவு 352)
போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத்தலைவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் அவசர நிலையை அறிவிக்கலாம்.
போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது. ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும் பொழுது அது 'உள்நாட்டு அவசர நிலை' எனப்படுகிறது.
இந்த வகையான அவசரநிலைகள் 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன.
மாநில அவசரநிலை (சட்டப்பிரிவு 356)
ஒரு மாநிலத்தில், மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் பொழுது அரசியலமைப்பின் விதிகளுக்கேற்ப ஆளுநர் அறிக்கை அளிக்கும் பொழுது, குடியரசுத்தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.
இந்த அவசரநிலை, சட்டப்பிரிவு352ன் படி நடைமுறையில் இருந்தாலும் அல்லது தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என்று சான்றளித்தாலும் மட்டுமே ஓராண்டைத் தாண்டியும் தொடரமுடியும்.
அதிகபட்சம் அவசரநிலையின் காலம் 3 ஆண்டுகள் இருக்கமுடியும். மாநிலமானது, குடியரசுத்தலைவர் சார்பாக ஆளுநரால் ஆளப்படுகிறது.
இந்தியாவில் முதன்முறையாக 1951இல் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டது.
நிதி சார்ந்த அவசரநிலை (சட்டப்பிரிவு 360)
நிதிநிலைத் தன்மை, இந்தியாவின் கடன் தன்மை மற்றும் இந்தியாவின் பகுதிகள் ஆபத்தில் இருந்தால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 360ன் கீழ் குடியரசுத்தலைவர் நிதி சார்ந்த அவசரநிலையைப் பிறப்பிக்கலாம்.
இந்த வகையான அவசர நிலையில் மத்திய - மாநில அரசு ஊழியர் எந்த வகுப்பினராயினும் அவர்களது ஊதியம், படிகள் மற்றும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைவரது ஊதியமும் குடியரசுத்தலைவரின் ஓர் ஆணையின் மூலம் குறைக்கப்படும்.
இந்த வகையான அவசரநிலை இந்தியாவில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.